Monday, December 20, 2010

விண்டோஸ் 8 தொகுப்பு 2012 இல்

  விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எல்ஜியின் உலகின் முதலாவது டுவல்-கோர் புரசெஸர் ஸ்மார்ட்போன்: X2

  உலகின் முதலாவது டுவல்-கோர் (Dual-core) புரசெஸரைக் கொண்ட அதிவேக கையடக்கத்தொலைபேசியினை எல்.ஜி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒப்டிமஸ் எக்ஸ் 2 (Optimus X2) எனப்பெயரிடப்பட்டுள்ளது.
சந்தையிலுள்ள மற்றைய ஸ்மார்ட் போன்களை விட இது வேகமானதென எல்.ஜி உத்தரவாதமளித்துள்ளது.

இதில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ட்ரோயிட் புரோயோ 2.2 இயக்குதளத்தின் மூலம் இக் கையடக்கத் தொலைபேசிகள் இயங்கவுள்ளன. எனினும் பின்னர் ஜிஞ்ஜர் பிரட் 2.3 இற்கு மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.
மற்றும் வேகமான இணையவசதி, 8 மெகா பிக்ஸல் கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 1.3 மெகாபிக்ஸல் முன் கெமாரா 32 ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி, 8 ஜிபி உள்ளக மெமரி என்பனவற்றையும் இது கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது அடுத்தமாதம் கொரியாவில் விற்பனைக்குவரவுள்ளது.



Sunday, December 19, 2010

விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன.இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும்.

இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள், உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் சென்று, இடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம்.

1. டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி):
டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும், போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களா? இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒவ்வொரு ஐட்டமாக, டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, எழுந்து வரும் மெனுவில், குளோஸ் குரூப் (Close Group) என்பதில் கிளிக் செய்திடவும்.

2. சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி):
உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதா? எந்த ட்ரைவ் சென்று, எப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமா? சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்து, உங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, சிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும்.

3. டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா):
இணைய தளங்களை வேகமாகத் திறக்க, டாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினை, உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும்.

4. ரீசைக்கிள் பின்னைத் தாண்ட:
அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்று, அங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும். அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என எண்ணினால், ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்தி, அந்த பைலை முற்றிலுமாக நீக்கவும்.

5. கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி):
உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரை, உங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்க, ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools செல்லவும். இங்கு Local Policies என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர் Security Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

6. டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி):
உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று, சிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து, டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம், சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களை, இந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும், போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களை, குயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம்.

7. எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி):
ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகி, அதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில், விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting) கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும், மீண்டும் இயக்கவும் செய்திடலாம்.

8.கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா):
பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, ஸ்பேஸ் பார் தட்டினால், பின்னணியில் இருக்கும் ஸைட்பார், முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால், டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்க, விண்டோஸ் கீயுடன், குயிக் லாஞ்ச் பாரில், திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும்.

9. கூடுதல் கடிகாரம் (விஸ்டா):
பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமா? நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Adjust Date/Time’ என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Additional Clocks என்பதில் கிளிக் செய்திடவும். இனி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில், உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம், அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும்.

10. ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா):
கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information என டைப் செய்து, என்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’ என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும்.

பைசா கோபுரம் சாய்விலிருந்து தடுத்து நிறுத்தப்படுகிறது

உலக அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம், வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது.

மேலும் மத்திய தரை கடலிலிருந்து வரும் உப்புக்காற்றும் மழைகாலங்களில் ஏற்படும் மண் அரிப்பும் கேட்டினை அதிகப்படுத்தி வருகின்றன. கோபுரம் சரிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் இந்த கோபுரத்தை பாதுகாக்கும் பணியை கடந்த 1989 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. சுமார் 6 மில்லியன் பவுண்டு செலவில் கோபுரம் சாய்விலிருந்து மீட்கப்படுகிறது. கோபுரத்திற்கடியில் சேர்ந்துள்ள மண் மற்றும் கழிவுப்பொருட்களை லேசர், உளி மற்றும் சிறிய வகை ஊசிகளை பயன்படுத்தி நீக்கி வருகின்றனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 5.5 டிகிரி சாய்ந்திருந்த கோபுரம் மீட்கப்பட்டு தற்போது 3.9 டிகிரி சாய்வு நிலைக்கு நேர் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி இன்னும் 200 வருடங்களுக்கு போதுமானது என்று இதன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொறியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 18

1642: ஆபெல் தாஸ்மென், நியூஸிலாந்தைச் சென்றடைந்த முதல் மனிதரானார்.
1878: அல் தானி குடும்பம் கட்டாரின் அரச குடும்பமாகியது.

1915: உட்ரோ வில்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பேது  எடித் போலிங் கால்ட் வில்சனை திருமணம் செய்தார்.
1935: லங்கா சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
1956: ஐ.நாவில் ஜப்பான் இணைந்தது.

1958: உலகின் முதலாவது தொலைதொடர்பு செய்மதி 'புரஜெக்ட் ஸ்கோர்' விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1978: டொமினிக்கா ஐ.நாவில் இணைந்தது.
1997: எச்.ரி.எம்.எல். 4.0 பதிப்பு வெளியிடப்பட்டது.
2009: டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் உலக காலநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 17

1586: கோ யோஸெய் ஜப்பானிய சக்கரவர்த்தியானார்.

1718: ஸ்பெய்னுக்கு பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது.

1961: போர்த்துகலிடமிருந்து கோவா பிராந்தியத்தை இந்தியா கைப்பற்றியது.

1967: அவுஸ்திரேலிய பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

1973: பலஸ்தீன தீவிரவாதிகள் இத்தாலியின் ரோம்விமான நிலையத்தில் மேற்கொண்ட தாக்குதலில 30 பயணிகள் பலி.

Friday, December 17, 2010

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரகசியம் அறியப்பட்டுள்ளது

உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.

இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.